மாடுகளை இழந்த விவசாயிக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவாரண தொகையை வழங்கியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்லகச்சேரி கிராமத்தில் விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 4 மாடுகளை நேற்று முன்தினம் அதே பகுதியில் அமைந்துள்ள பழமையான கூட்டுறவு சங்கத்தின் அருகே கட்டியுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. அப்போது திடீரென கூட்டுறவு சங்க கட்டிடத்தின் சுவர் இடிந்து ஏழுமலையின் மாடுகள் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 4 மாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன், துணை தலைவர் நெடுஞ்செழியன், தாசில்தார் பாண்டியன், வட்டார வளர்ச்சி அதிகாரி பன்னீர்செல்வம், இந்திராணி உள்ளிட்ட பலர் ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் நிவாரண தொகையை ஏழுமலைக்கு வழங்கியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.