கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி விவசாயிகளின் நலன் கருதி தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் விதி 110-ன் கீழ் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 1-ஆம் தேதி இந்த நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டது. மேலும் இது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வெளி மாவட்டங்களில் உள்ள நகை பரிசோதகர்கள், வங்கி பணியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு தரவுகளும் பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிகாரிகளுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “ஒரே ரேஷன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் பெற்ற ஒன்றுக்கும் மேற்பட்ட நகைக்கடன் பட்டியல், ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தி வழங்கப்பட்ட பல்வேறு நகைக்கடன் குறித்த பட்டியல் உள்ளிட்ட பல்வேறு பட்டியலின் தரவுகள் பெறப்பட்டுள்ளது. எனவே தற்போது துணைப்பதிவாளர் தலைமையில் நகை கடன் தள்ளுபடி பெறுவதற்கு தகுதியானவர் மற்றும் தகுதியற்றவர் பட்டியலை தயார் செய்ய குழு அமைக்கப்பட வேண்டும்.
இந்தக் குழு சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு பட்டியலை தயார் செய்து வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஒரே ரேஷன் அட்டை எண் மூலமாக ஒன்று அல்லது அதற்கு மேல் வழங்கப்பட்ட 40 கிராமுக்கு மேல் உள்ள நகைக்கடன்கள் குறித்தும், ஒரே ஆதார் எண் மூலமாக ஒன்று அல்லது அதற்கு மேல் வழங்கப்பட்ட 40 கிராமுக்கு மேல் உள்ள நகைக்கடன்கள் குறித்தும் இறுதி பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும்.
அதன் பிறகு தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் மீது சந்தேகம் ஏதேனும் இருந்தால் அவர்களை தகுதியற்றவர்கள் பட்டியலில் சேர்த்து அதற்கான காரணங்களையும் குறிப்பிட வேண்டும். எனவே வருகின்ற பிப்ரவரி 11-ம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்திற்கு நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியுள்ள மற்றும் தகுதியற்றவர்கள் பட்டியலை தயார் செய்து அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.