தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி தகுதியான நபர்களுக்கு தற்போது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி நகைக்கடன் தள்ளுபடி தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக அரசு பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அதில் குறிப்பாக விவசாயிகள் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று விதி 110-ன் கீழ் கடந்த செப்டம்பர் மாதத்தில் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நகைக்கடன் தள்ளுபடி வழங்குவதில் பல முறைகேடுகள் நடந்தது.
அதாவது ஒரே நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிகளில் கடன் வாங்குவது, போலி நகைகளை கொண்டு நகைக்கடன் பெறுவது உள்ளிட்ட பல முறைகேடுகள் நடந்தது. அதேபோல் வங்கி அதிகாரிகளும் இந்த முறைகேடுக்கு உடந்தையாக இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது. எனவே இந்த முறைகேடுகளை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதில் குறிப்பாக நகைக்கடன் பெற தகுதியான நபர்களின் பட்டியலை தகுந்த ஆய்வு மேற்கொண்டு தயார் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து ஏராளமானோர் இந்த நகைக்கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பித்தனர். அதில் தமிழகம் முழுவதும் நகைக்கடன் பெற்ற 13,47,033 பேரில் 10,18,066 பயனாளிகள் மட்டுமே தகுதி உள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதி உடையவர்களுக்கு சான்றிதழ்களும், அவர்களின் நகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழக அரசுக்கு தற்போது நிதி நெருக்கடி உள்ள நிலையில், நகைக்கடன் தள்ளுபடி பொதுமக்களின் நலன் கருதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இன்னும் நகைக்கடன் தள்ளுபடியில் தகுதியுள்ளவர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படாமல் இருந்தால் அவர்கள் உடனடியாக உரிய ஆதாரத்தை சமர்ப்பித்து நகைக்கடன் தள்ளுபடியை பெற்றுக் கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.