கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை தங்க நகை அடமானம் வைத்திருக்கக் கூடியவர்களின் விவரங்களை தமிழக அரசு கோரியுள்ளது. கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரில் நகைக் கடன் தள்ளுபடி தொடர்பாக அறிவிப்பு வெளியாகுமா என்றும் எதிர்பார்ப்பு இருந்தது.
கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு மட்டுமே பட்ஜெட்டில் இடம் பெற்றது. இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில், கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் அதாவது 40 கிராம் அளவுக்கு உட்பட்டு நகையை ஈடாக வைத்து கடன் வழங்கப்பட்டு மார்ச் 31, 2021 வரை நிலுவையில் உள்ள விவரங்கள் கோரப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அவர்களுடைய ஆதார் எண், குடும்ப அட்டை விவரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டு வரும் 16ஆம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.