தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி வழங்க அரசு 6 கோடி ஒதுக்கியுள்ளது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். ஆனால் நகை கடனில் ஏராளமான தவறுகள் நடந்து உள்ளது. தங்க நகைகளை அடகு வைக்காமல் போலி நகைகளை அடகு வைத்து கடன் வாங்கியுள்ளனர். ஒரு ஆதார் எண்ணை வைத்து ஒரே நபர் பல சங்கங்களில் கடன்களை வாங்கி உள்ளனர். அதில் மிகப்பெரிய தில்லு முல்லு கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். தனியார் வங்கிகளில் உள்ள நகைகளை திருப்பி கூட்டுறவு சங்கங்களில் மோசடியாக வைத்து கடன் பெற்றுள்ளனர். மோசடி செய்தவர்களை கண்டறிந்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தள்ளுபடி பெறுவதற்காக நகைகளை வைக்காமலேயே நகை கடன் பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் இதுபோன்ற மோசடிகள் நடந்து உள்ளது. எனவே உரிய ஆய்வுக்கு பிறகு தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் நகை கடன் வழங்கப்படும்.
திருட்டுத்தனமாக கடன் பெற்றோருக்கு சலுகை கிடைக்க கூடாது என்பதே அரசின் முக்கிய நோக்கம். அவர்கள் அரசாங்கத்தை கொள்ளையடித்து விடுவார்கள். எனவே தகுதி உள்ளவர்களை கண்டறிந்து விரைவில் நகை கடன் தள்ளுபடி வழங்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. ஆய்வுக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பிறகு யாருக்கெல்லாம் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற முழுமையான அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.