தமிழக சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் வைக்கப்பட்டிருக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அரசு தலைமை ஏற்ற பிறகு இந்தத் திட்டம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்தது. தமிழக அரசு அனைத்து கூட்டுறவு சங்கங்களில் இருக்கும் நகை கடன்களையும் ஆய்வு செய்து,உரிய ஆலோசனை மேற்கொண்டு நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணையை சமீபத்தில் வெளியிட்டது.
அதன்படி அரசு நிபந்தனைகளின் கீழ் வகைப்படுத்தப்படும் நகை கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு சங்க நகை கடைகளில் பல கோடிக்கும் அதிகமான மோசடிகள் நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் முத்தையா தொழில்நுட்ப கல்லூரி எதிரே உள்ள வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனையாளர் சங்கத்தின் அரசு நகை கடன் தள்ளுபடி குறித்து குறிப்பிட்ட வங்கியின் உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நகை கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் கிடைக்காது என்பது குறித்த பெயர் பட்டியலை ஒட்டி வைத்துள்ளனர். அந்தப் பட்டியலைப் பார்த்து அனைவரும் விபரங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்று கூட்டுறவு சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். அந்தப் பட்டியலின் படி சிதம்பரம் தலைமை அலுவலகத்தில் 684 பேரும், காட்டு மன்னார்குடி கிளை அலுவலகத்தில் 954 பேரும் என மொத்தமும் 1638 பேருக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.