வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கொரிய எல்லையில் தொடர்ந்து போர் பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் தென் கொரியா இதனை கண்டுகொள்ளாமல் கூட்டு போர்ப் பயிற்சியில் தொடர்ந்து வருகிறது அந்த வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமான படைகள் மிகப்பெரிய கூட்டுப் பயிற்சி நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இரு நாட்டு விமானப்படைகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான விமானிகள் 24 மணி நேரமும் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கின்றார்கள்.
இந்த சூழலில் தென்கொரியா உடனான கூட்டுப் போர் பயிற்சி நிறுத்தாவிட்டால் அமெரிக்காவிற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என வடகொரியா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது பற்றி வடகொரியா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அமெரிக்கா தனது பாதுகாப்பு நலன்களுக்கு பொருந்தாத எந்த ஒரு தீவிரமான முன்னேற்றங்களையும் விரும்பவில்லை என்றால் அது பயனற்ற போர் பயிற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் அது அனைத்து விளைவுகளுக்கும் முற்றிலும் பழியை ஏற்க வேண்டி இருக்கும். மேலும் கடுமையான ராணுவ ஆத்திரமூட்டல்களில் அமெரிக்கா தொடர்ந்து நீடித்தால் வடகொரியா மிகவும் கடுமையான பதிலடிகளை கையில் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.