திண்டுக்கல் அருகே தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு குழந்தையுடன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம் கொல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகா என்பவருக்கும், கரூர் மாவட்டம் தாந்தோனிமலை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் கௌசிகா ஸ்ரீ என்ற 6 வயது குழந்தையும் உள்ளது. இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கார்த்திகா தனது மகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின் சுப்பிரமணியன் குடும்பத்தினரும் சுப்பிரமணியனும் நேரில் சென்று கார்த்திகாவை அழைத்தபோதும் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.
பின் சில நாள்கள் தனது தாய் வீட்டில் தங்கிவிட்டு நேற்று கரூரில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு குழந்தையுடன் கார்த்திகா வந்துள்ளார். அங்கே வீடு பூட்டால் பூட்டப்பட்டிருந்ததையடுத்து வெளியிலிருந்து பலமுறை கூச்சலிட்டுள்ளார். ஆனால் வீட்டில் இருந்தவர்கள் யாரும் மதிக்காததால், வீட்டின் கதவு முன்னே அமர்ந்து தனது கணவருடன் சேர்த்து வைக்குமாறு குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கார்த்திகா மற்றும் சுப்பிரமணியன் குடும்பத்தினரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.