கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாதவசேரி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் குவைத் நாட்டில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் சொந்த ஊருக்கு வந்த சங்கர் ஓட்டுநர் உரிமத்தை கொண்டு செல்லாமல் மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டு குவைத் சென்று விட்டார். இதனால் சங்கரின் தம்பி அருள் கள்ளக்குறிச்சியில் இருக்கும் கூரியர் நிறுவனத்திற்கு சென்று அண்ணனின் ஓட்டுநர் உரிமத்தை குவைத் அனுப்புமாறு கூறியுள்ளார். அப்போது 5 நாட்களுக்குள் கூரியர் செல்ல வேண்டுமெனில் 3500 செலவாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அருள் 3,500 ரூபாயை கொடுத்து 5 நாட்களுக்குள் கூரியரை அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
ஆனால் 10 நாட்கள் ஆகியும் சங்கருக்கு கூரியர் கிடைக்கவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரிடம் கேட்டபோது கடந்த பிப்ரவரி மாதம் அந்த கூரியர் சென்னையில் இருக்கும் நிறுவனத்திலேயே இருந்தது தெரியவந்தது. இதனால் அருள் விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கூரியர் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த குறைதீர் ஆணைய தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் மீரா மைதீன், அமலா ஆகியோர் கூரியர் நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி அருளுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகை, வழக்கு செலவுக்காக ஐந்தாயிரம் ரூபாய் தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.