கோவையில் பிரபல இனிப்புக் கடையில் வாங்கிய பலகாரங்கள் கெட்டுப் போய் இருந்ததால் வாடிக்கையாளர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
கோவை கிட்டாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் வி.எம் சந்திரசேகர் இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்குவதற்காக கோவையில் உள்ள பிரபல கிருஷ்ணா ஸ்வீட்ஸ் என்ற இனிப்புக் கடையில் பலகாரங்கள் வாங்கியுள்ளார். இவர் மொத்தம் எட்டு கிலோ இனிப்பு வகைகளை அரை கிலோ பாக்கெட் அளவிற்கு வாங்கியுள்ளார்.தொடர்ந்து வாங்கிய இனிப்பு பலகாரங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்கி விட்டு மீதி இருந்ததை வீட்டிற்கு வந்து சந்திரசேகர் பிரித்து பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதில் இருந்த இனிப்பு பலகாரங்கள் அனைத்தும் கெட்டுப் போய் இருந்தன. இதனைத் தொடர்ந்து உடனடியாக அந்த இனிப்பு கடைக்கு தொடர்புகொண்டு விசாரித்தபோது இதற்கு கடையின் நிர்வாகம் பதில் அளிக்கும் என கூறிவிட்டு ஊழியர்கள் இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் தொடர்பு கொண்டபோது அழைப்பை ஏற்காமல் தவிர்த்துள்ளனர். இதனால் கோபமுற்ற சந்திரசேகர் கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பைச் சேர்ந்த லோகுவிடம் கெட்டுப்போன இனிப்பு பலகாரங்கள் மற்றும் அதனை வாங்கியதற்கான பில் உள்ளிட்டவை கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து ஸ்ரீ கிருஷ்ணா இனிப்பு கடையின் மீது கன்ஸ்யூமர் கோர்ட்டில் புகார் அளிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.