திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நாச்சிப்பட்டு கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். நேற்று முருகன் ஆட்டோவில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு திம்மலையில் இருக்கும் தனியார் பள்ளியில் அதனை இறக்கி வைத்துவிட்டு திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தியாகதுருகம் மின்வாரிய அலுவலகம் அருகே சென்ற போது சாலையில் கிடந்த பையை முருகன் திறந்து பார்த்துள்ளார். அந்த பையில் 9,500 ரூபாய் பணம், ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவை இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த முருகன் உடனடியாக அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதனையடுத்து ஆதார் கார்டில் இருந்த முகவரியை வைத்து போலீசார் விசாரித்த போது, பை பாவந்தூர் தக்கா கிராமத்தைசேர்ந்த தமீஸ்தீன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது தொலைந்து போன பை, அதிலிருந்து ஆவணங்கள் குறித்து தமீஸ்தீன் சரியாக தெரிவித்தார். இதனால் போலீசார் அவரை நேரில் வரவழைத்து பையை ஒப்படைத்தனர். மேலும் நேர்மையாக செயல்பட்ட முருகனை போலீசார் பாராட்டியுள்ளனர்.