கேரளாவில் அரசு ஊழியர்கள் பகுதி நேரமாக வேலை செய்ய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதுவரை இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால் இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதிவரை திறக்கத் தடை விதித்தது.
மேலும் நாளை மக்கள் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே கொரோனா வைரஸ் மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலங்களில் கூடுதலாக பரவி வருகிறது.
இதனால் அங்கு கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு மருத்துவமனை, மருந்து நிலையங்களை தவிர அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் அடுத்த 2 வாரங்களுக்கு அரசு ஊழியர்கள் பகுதி நேரமாக பணியாற்றினால் போதும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.