Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை…. ஐந்து நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு….!!!

கேரளாவில் கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மையம் கொண்டுள்ளதால் மேலும் 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தில் சிக்கியும் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டும் இதுவரை குழந்தைகள் உட்பட 4 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கேரளாவின் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேலும் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதில் கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், வயநாடு, போன்ற மாவட்டங்களில் அதிக பட்ச மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் சில மாவட்டங்களில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அந்த மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. மேலும் பத்தினம்திட்டா,இடுக்கி ,ஆலப்புழா, எர்ணாகுளம் ,கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் மழை பாதிப்பு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அங்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த பகுதிகளில் மழை நிவாரண குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 22 முகாம்கள் திறக்கப்பட்டு இதில் 672 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் உபரிநீர் திறந்து விடப்படுவதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் சாலக்குடியில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இடுக்கிப் போன்ற மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் அங்கு இரவு நேர போக்குவரத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |