கேரளாவில் குரங்கு காய்ச்சலால் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கண்காணிப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். குரங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர் என சந்தேகிக்கப்படுகிறது. அவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரி புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் பரிசோதனை முடிவு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே இந்த விடயத்தை உறுதிப்படுத்த முடியும் எனவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்தார். அவர் பலருடன் தொடர்பில் இல்லை என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அவருடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கு குரங்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அவர் இங்கு பரிசோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குரங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறி காய்ச்சல் மற்றும் பெரியம்மை போன்ற சொறி. சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு இந்த அறிகுறிகள் உள்ளன.
முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குரங்கு நோய் உறுதி செய்யப்பட்டது.முதற்கட்ட பரிசோதனையில் குரங்கு காய்ச்சல் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்தலில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார். மேலும், நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் சிறப்பு கண்காணிப்புக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.