கேரளாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 15 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு முதல் திருமண வயதிற்கு வராத சிறுமிகள் அதாவது 15 முதல் 19 வயதிற்கு இடைப்பட்ட வயதுள்ள சிறுமிகள் 10 ஆயிரத்து 613 பேர் பிரசவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 5742 பிரசவம் கிராமப் பகுதியில் பதிவாகியுள்ளது. மேலும் 5239 க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இவ்வாறு சிறுமிகள் பிரசவ நிகழ்வின்போது தாய் அல்லது சேய் என மொத்தம் 92 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 20 ஆயிரத்து 597 சிறுமிகள் முதல் குழந்தையும், 116 சிறுமிகள் இரண்டாவது குழந்தையும், 59 சிறுமிகள் மூன்றாவது குழந்தையும், மேலும் 16 சிறுமிகள் நான்காவது, குழந்தையும் பெற்று எடுத்துள்ளனர். இதுபற்றி சமூக சேவகர் தான்ய ராமன் கூறுகையில், இவ்வாறு சிறுமிகள் பிரசவிக்கும் சம்பவம் மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறிய வயதிலேயே திருமணம் செய்து கொடுத்ததால் அவர்களுடைய எதிர்காலம் நன்றாக அமையும் என நினைக்கிறார்கள். ஆனால் இது தவறு, சிறிய வயதிலேயே திருமணம் செய்து கொடுப்பதும் அவர்கள் பிரசவிப்பதும் மன அழுத்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. மேலும் குழந்தைகளும் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்காவிட்டால் எதிர்காலத்தில் மிகப்பெரும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது வரும் என அவர் கூறினார்.