காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடா யாத்ரா என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 12 மாநிலங்கள் வழியாக 3500 கிலோமீட்டர் தூரத்தை 350 நாட்களில் கடக்கும் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் நடை பயணத்தை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் கடந்த 4 நாட்களாக பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி இன்று கேரள மாநிலத்திற்கு சென்றுள்ளார். இவர் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள பாரசலாவிற்கு சென்றபோது அங்குள்ள இளைஞர்கள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த ராகுல் காந்தி மிகுந்த நம்பிக்கையுடன் தன்னுடைய நடை பயணத்தை தொடங்கி இருக்கிறார். இவர் கேரள மாநிலத்தில் மட்டும் 19 நாட்களுக்கு நடைபயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இந்நிலையில் ராகுல் காந்தி பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை நேற்று சந்தித்து பேசினார். இது தொடர்பான வீடியோவை பாஜக செய்தி தொடர்பாளர் தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் ராகுல் காந்தி ஏசு தான் கடவுளின் உண்மையான வடிவமா என்று கேட்க, பாதிரியார் ஏசு தான் உண்மையான கடவுள் என்றும், அவருடைய சக்தியை போன்று நம்மில் எதுவும் இல்லை எனவும் கூறுகிறார். இது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. அதாவது இயேசு கடவுளை பற்றி புகழ்ந்து இந்து கடவுளை அவமதித்த பாதிரியாரை ராகுல் காந்தி எதற்காக கண்டிக்கவில்லை என பாஜக கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.