இடுக்கியில் 3 விலை உயர்ந்த பூனைகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் கார்கூந்தல் என்ற பகுதியில் வசிப்பவர் தங்கப்பன் (வயது 38). மேலும் அதே பகுதியில் ஜோஸ் என்பவர் செல்லப்பிராணிகளான கிளி, அணில், பறவை, பூனைகள் உட்பட பல உயிரினங்களை விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இவரது கடையில் இருந்த, 3 பூனைகள் கடந்த 2 தினங்களுக்கு முன் காணாமல் போனது தெரிய வந்தது. எனவே இதுகுறித்து இடுக்கி போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் விசாரணை நடத்தினர். அப்போது பூனைகளை கடத்தி சென்றது தங்கப்பன் என தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து இடுக்கி போலீசார் தங்கப்பனை பிடித்து அவரிடம் இருந்த 3 பூனைகளையும் மீட்டுள்ளனர். இந்நிலையில் அவர் திருடிய 3 பூனைகளின் மதிப்பு 27 ஆயிரம் ரூபாய் என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலும் பூனையை திருடிய தங்கப்பனை போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.