கேரளாவில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவனந்த புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் திருவனந்த புரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர் , வயநாடு ஆகிய 10 மாவட்டங்களுக்கும் இன்று கன மழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2 மற்றும் 3ம் தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ள திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் காசர்கோடு தவிர மாநிலத்தின் கோட்டயம்,எர்ணாகுளம், இடுக்கி போன்ற 3 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதி வரை மாநிலத்தில் பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கேரளாவில் சென்ற ஜூன் 1ஆம் தேதி தென் மேற்குப் பருவமழை துவங்கியது. முதலாவதாக லேசான அளவு மழை பெய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. இதனிடையில் மழையின் காரணமாக நேற்று மட்டும் 5 பேர் இறந்துள்ளனர். இதனால் இதுவரையிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 13-ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கீழ் பெரியாறு, பொன்முடி, எரட்டையார், குந்தலா, பெரிங்கல்குத்து மற்றும் மூழியாறு போன்ற அணைகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பம்பா, நெய்யாறு, கரமனை, மணிமலையாறு மற்றும் மீனாச்சல் போன்ற 5 ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து மணிமலை ஆறு, நெய்யாறு, கரமனை ஆறுகளில் வெள்ளஅபாய எச்சரிக்கையானது விடப்பட்டுள்ளது. மழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் 166 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 4639 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவனந்த புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொச்சியில் உள்ள பிரபல அலுவா மகாதேவ ஆலயம் மழை வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது. கோவிலைச்சுற்றி வெள்ள நீர் சூழ்ந்தபடி செல்கிறது. அங்கு பெய்துவரும் தொடர் கன மழை காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக அணையிலிருந்து அதிகமான தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து ஆற்றில் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. கேரளா, மகாத்மாகாந்தி, காலடி உட்பட பல பல்கலைக்கழகங்கள் இன்று நடைபெறயிருந்த தேர்வை ஒத்திவைத்துள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என முதல் மந்திரி பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார். பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவுரைகளைப் கடைபிடிக்குமாறும் முதல் மந்திரி வலியுறுத்தியுள்ளார்.