கேரளாவுக்கு கடத்தி சென்ற 2 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறையினருக்கு கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த போவதாக ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் கேரளாவின் எல்லைப்பகுதியான வாளையாறு, வேலந்தாவளம் நெடுஞ்சாலையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினார்கள்.
அப்போது வேலந்தாவளம் பாதையாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மூட்டை மூட்டையாக அரிசி இருந்தது. இதை பார்த்த அதிகாரிகள் அதை பிரித்து பார்த்தபோது, அதில் 22 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து வாகனத்தை ஓட்டி வந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெர்னாண்டஸ் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதன் பின் அவரிடம் நடத்திய விசாரணையில் கோவையிலிருந்து ரேஷன் அரிசியை குறைவான விலைக்கு வாங்கி அதனை கேரளாவுக்கு கடத்தி சென்றார் என்பது தெரியவந்துள்ளது. இதை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து ஒரு டன் ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
இதைப்போன்று வாளையாறு பகுதியில் அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்து பார்த்தபோது, அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்ததை கண்டு பிடித்தார்கள். இதையடுத்து அந்த வாகனத்தை ஓட்டி வந்த கோவையில் வசித்து வந்த சாதீக் மற்றும் பாலக்காட்டில் வசித்து வந்த ஜோவா என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்துள்ளனர்.