தி.மு.க கவுன்சிலர்கள் 35 பேர் கேரளாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நடைபெற்ற நெல்லை மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 55 வார்டுகளில் 44 இடங்களில் தி.மு.க அமோக வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் 2-ஆம் தேதி வெற்றி பெற்ற அனைத்து கவுன்சிலர்களும் மாநகராட்சியின் அலுவலகத்தில் நடைபெற உள்ள முதல் கூட்டத்தில் பங்கேற்று உறுப்பினர்களாக பதவி ஏற்க உள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து மேயர், துணை மேயர் ஆகியோருக்கான மறைமுக தேர்தல் வருகிற 4-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தி.மு.க தனி மெஜாரிட்டியுடன் தேர்தலில் மாநகராட்சியை கைப்பற்றி இருப்பதால், சில கவுன்சிலர்கள் மேயர் பதவியையும் குறிவைத்து காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது. அதேபோல பல முக்கிய பிரமுகர்கள் துணைமேயர் பதவிக்கும் இப்போதே காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.இது தவிர சில முக்கிய கவுன்சிலர்களும் துணை மேயர் பதவியை தங்களுக்கு ஒதுக்கி தருமாறு கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தி.மு.க கவுன்சிலர்களை யாராவது கடத்தி சென்று, தாங்கள் வெற்றி பெற அடித்தளம் அமைத்து விடக்கூடாது என்னும் நோக்கில் பெரும்பாலான கவுன்சிலர்களை சுற்றுலா அழைத்து சென்றுள்ளனர். அதன்படி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க கவுன்சிலர்களில் சுமார் 35 பேர் நேற்று இரவு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.மேலும் அங்கிருந்து கேரள மாநிலத்தில் உள்ள பூவார் பகுதிக்கு சுற்றுலா புறப்பட்டு சென்றனர். இதனை அடுத்து தி.மு.க கவுன்சிலர்கள் வருகிற 2-ந்தேதி அன்று உறுப்பினராக பதவி ஏற்கும் போது தான் நெல்லை வருவதாகவும் கூறப்படுகிறது.