கேரளா மற்றும் ராஜஸ்தானைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்திலும் பறவைக்காய்ச்சல் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்ப்பூர், ஜோத்பூர், Kota உள்ளிட்ட பகுதிகளிலும், கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களிலும், பறவைக் காய்ச்சல் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த பல்லாயிரக்கணக்கான பறவைகள் கொல்லப்பட்டுள்ளன.
மத்தியப் பிரதேசத்திலும் பறவைக்காய்ச்சல் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுளது. கடந்த 23-ம் தேதியிலிருந்து, கடந்த 3-ம் தேதி வரை, இந்தூர், மாண்ட்சூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான காகங்கள் உயிரிழந்துள்ளதாகவும், இவற்றின் மாதிரிகளை சோதனையிட்டதில், 4 காகங்களுக்கு பறவைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாவட்டம், ஜூனாகத் மாவட்டத்திலுள்ள கரோ நீர்த்தேக்கத்திற்கு அருகே, 53 காகங்கள் இறந்து கிடந்துள்ளன. இவற்றின் மாதிரிகள், பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் வந்த பின்னரே, குஜராத்தில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளதா? என்பது தெரியவரும்.
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதையடுத்து, அதை தடுக்க தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கோழி, வாத்து உள்ளிட்ட பறவைகளைக் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கால்நடைத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.