கேரள அரசியலில் அன்று சரிதா நாயர் விவகாரமும், தற்போது ஸ்வப்னா விவகாரமும் புயலை கிளப்பியுள்ளது.
கேரளாவில் கடந்த முறை உம்மன் சாண்டி அரசுக்கு தலைவலியாக இருந்த சூரிய ஒளி தகடு முறைகேடு போன்று இன்றைய பினராய் விஜயன் அரசுக்கு ஆபத்தாக விசுவரூபம் எடுத்து இருக்கின்றது தங்கம் கடத்தல் விவகாரம். தங்கக் கடத்தல் விவகாரத்தில் பினராய் விஜயன் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கோரிக்கை விடுத்திருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து திருவனந்தபுரத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, தங்கம் கடத்தல் வழக்கில் சிபிஐ விசாரணை நியாயமாகவும், முறையாகவும் நடைபெற பினராய் விஜயன் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் கூறும் போது, தங்கம் கடத்தல் விவகாரத்தில் முதலமைச்சர் அலுவலகத்திற்கு நேரடித் தொடர்பு உண்டு. ஐடி துறைக்கு பொறுப்பு வகித்த முதன்மைச் செயலாளரை பினராயி விஜயன் நீக்கியுள்ளார். குற்றவாளிகளை முதலமைச்சர் அலுவலகம் பாதுகாத்து உள்ளது. முதலமைச்சர் அலுவலகத்தில் மேற்பார்வையில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. எனவே பினராய் விஜயன் பதவி விலக வேண்டும். இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும், என்பதே எங்கள் கோரிக்கை. சிபிஐ விசாரணை நியாயமாக நடைபெற முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார்.
உம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு காலத்தில் சூரிய ஒளி தகடு முறைகேடு விவகாரம் அம்பலமானது. முதல் அமைச்சர் உட்பட பல்வேறு அரசியல் புள்ளிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட சரிதா நாயர் என்ற பெண், சூரிய ஒளி ஒளி தகடு முறைகேட்டில் ஈடுபட்டு பல கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி தோல்வியின் காரணமாக அமைந்தது. இதே பாணியில் தங்க கடத்தல் விவகாரத்தை கையில் எடுத்து பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தக் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இரண்டு விவகாரங்களும் அழகான இரண்டு பெண்களை மையமாகக் கொண்டவை என்பதால் பரபரப்பில் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்ற நிலை இருக்கிறது.