பிளஸ்- 2 முடித்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுஷ் படிப்புகள் ஆகியவற்றில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அவசியம் ஆகும். இந்த வருடத்துக்கான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு, நீட் நுழைவுதேர்வு சென்ற ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 3,500 மையங்களில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் மட்டும் 18நகரங்களில் நடைபெற்றது. நாடு முழுவதும் 10.64 லட்சம் மாணவியர் உட்பட 18.72 லட்சம் பேர் தேர்வில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இவற்றில் 15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
கேரள மாநிலமான கொல்லத்தில் நீட் தேர்வில் கலந்துகொண்ட மாணவிகளின் உள்ளாடையை கழற்றிய பிறகே தேர்வெழுத அனுமதித்ததாக சொல்லப்படும் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். கொல்லம் மாவட்டம் ஆயூரிலுள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நீட்தேர்வின்போது இந்த அவமானகரமான நிகழ்வை சந்தித்ததாக ஒரு சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து இந்திய தண்டனைச்சட்டம் (ஐபிசி) பிரிவு 354 பெண்ணைத் தாக்குதல் (அல்லது) குற்றவியல் பலாத்காரம் செய்தல் மற்றும் 509 ஒரு பெண்ணின் அவமதிக்கும் நோக்கில் வார்த்தை, சைகை செய்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பெண் அதிகாரிகள் குழு சிறுமியின் வாக்குமூலத்தை பதிவுசெய்த பிறகு, வழக்குபதிவு செய்யப்பட்டது. தற்போது விசாரணை தொடங்கப்பட்டு இருப்பதாகவும் இந்த குற்ற செயலில் ஈடுபட்ட போலீசார் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறையினர் தெர்வித்தனர்.