கேரளா உடனான தங்களது மாநில எல்லைகளை தற்போது திறப்பது மரணத்தை விரும்பி தழுவுவதற்கு சமமானது என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடக முதல்வரின் இந்த கருத்து பின்னணி என்ன.! நாட்டிலேயே கொரோனோவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக கேரளா உள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் ஒட்டியுள்ள காசர்கோடு பகுதியில் பாதிப்பு அதிகமாகும். இதன் விளைவாக கேரளாவிலான எல்லைகளை கர்நாடக மூடியுள்ளது. கொரோனா நோயாளிகள் தங்கள் மாநிலத்தில் உள்ள மங்களூரில் சிகிச்சை பெற புகுந்து விடுவார்கள் இதனால் தங்கள் மாநில மக்களுக்கு ஆபத்து என்றும் இதற்கு கர்நாடக விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடகாவின் இந்த முடிவை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் அம்மாநில அரசு வழக்குத் தொடுத்தது. மருத்துவ சேவைகளுடன், சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப்படுவதாக கேரள அரசு முறையிட்டு இருந்தது. இதை அடுத்து கர்நாடகா தன்னுடைய எல்லைகளை திறந்து விட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகிய நிலையில், இதுகுறித்து பதில் தர மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் “கேரள எல்லையை திறக்க முடியாது என்றும் அவ்வாறு செய்தால், மரணத்தை விருப்பப்பட்ட தழுவுவதற்கு சமம் என்றும்” முன்னாள் பிரதமரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான தேவகவுடாவிற்கு எழுதிய கடிதத்தில் எடியூரப்பா கூறிருக்கிறார்.
முன்னதாக மனிதாபிமான அடிப்படையில் கேரளாவுடன் எல்லையை திறக்க வேண்டுமென தேவகவுடா கர்நாடக அரசிற்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கிடையில் தமிழக எல்லையை கேரளா மூடி விட்டது என்று வெளியான தகவல்களை அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் மறுத்துள்ளார். தமிழ் மக்கள் தங்களுக்கு சகோதரர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேரள முதல்வரின் கருத்துக்கும் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், இரு மாநில மக்களின் சகோதரத்துவம் மேலும் வளரும் என்றும் தெரிவித்தார்.