கேரளாவில் விஸ்மயா எனும் பெண் வரதட்சனை கொடுமையால் இறந்த வழக்கில், அவருடைய கணவர் கிரண்குமார் குற்றவாளி என்று கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள சாஸ்தாம் கோட்டா பகுதியில் விஸ்மயா (22) என்ற பெண் வசித்து வந்தார். மருத்துவம் படித்த இவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியரான கிரண்குமார் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மனைவி விஸ்மயாவை, கிரண்குமார் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் 21ம் தேதி மர்மான முறையில் விஸ்மயா வீட்டில் இறந்துள்ளார்.
இதற்கு முதல்நாள் தான் விஸ்மயா, கணவர் அடித்ததால் தனக்கு ஏற்பட்ட காயங்களை புகைப்படங்கள் எடுத்து வாட்ஸ்ஆப் வாயிலாக உறவினருக்கு பகிர்ந்துள்ளார். இவ்வாறு கேரளாவையே உலுக்கிய இந்த வரதட்சணை கொடுமை சம்பவத்தையடுத்து, கிரண்குமார் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கை விசாரித்து வந்த கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் விஸ்மயா மரணத்தில் கணவர் கிரண்குமார் குற்றவாளி எனத் தீர்ப்பு அளித்தது. மேலும் குற்றவாளியின் தண்டனை விபரம் நாளை அறிவிக்கப்படும் என்று நீதிபதி சுஜித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.