முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக நவம்பர் 8-ம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: “முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 142 அடி வரை நீரை தேக்கி கொள்வதற்கு தமிழக அரசுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் கேரள அரசு, அணையின் நீர்மட்டம் 136 ஆடி இருக்கும்போதே நீரை திறந்து இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.
இதனை தமிழக அரசு கண்டு கொள்ளாதது ஏன்? தமிழக அரசு தனது உரிமையை கேரள அரசிடம் அடகு வைத்து விட்டது. முதல்வர் ஸ்டாலின் மாநிலத்தின் உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டார். கேரள அரசிடம் மண்டியிட்டு சரணடைந்து விட்டார்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும் திமுக அரசு செய்த தவறை உணர்ந்து தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அந்த போராட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.