கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக கோவை நகை பட்டறை உரிமையாளரிடம் நடைபெற்று வரும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேரளா தங்க கடத்தல் தொடர்பான விசாரணையில் அரபு நாடுகளிலிருந்து கடத்திவரப்பட்ட தங்கம் தென்னிந்தியாவின் பல்வேறு நகரங்களில் நகைகளாக மாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக கோவை, சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடை உரிமையாளர் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையை சேர்ந்த நந்தகோபால் என்பவருக்கு சொந்தமான நகை பட்டறை மற்றும் இல்லங்களில் சோதனை நடைபெற்றது.
கூடுதல் விசாரணைக்காக கொச்சின் அழைத்துச்செல்லப்பட்ட நந்தகோபால்யிடம் கடந்த 10 நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது முதன்மைக் குற்றவாளியான சொப்னா கடத்திய தங்கக் கட்டிகளைப் பணமாக மாற்றும் பணியில் நந்தகோபால் ஈடுபட்டு கடத்தல் தங்கம் கோவைக்கு எடுத்து வரப்பட்டு நகைகளாக மாற்றப்பட்டது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.