கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் தொடர்புள்ளவர்களை விசாரித்து தமிழகத்திலும் சோதனை மேற்கொள்ள என்.ஐ.ஏ. முடிவெடுத்துள்ளது.
திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் சரக்கு விமானம் மூலம் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் ஊழியர்களான சுரேஷ் அவருடைய உறவினர் சந்திப்பு உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் அரசியல் பாதிப்பை ஏற்படுத்திய இந்த தங்கம் கடத்தல் விவகாரம் தமிழ்நாட்டிலும் முக்கிய விமானங்கள் மூலம் இந்த தங்க கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் என்.ஐ.ஏவின் பார்வை தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது. சென்ற ஆண்டில் தமிழகத்தில் உள்ள சென்னை திருச்சி விமான நிலையங்களில் கடத்தல் சம்பவம் குறித்தும் கைதானவர்களின் பின்னணி குறித்தும் என். ஐ. ஏ அதிகாரிகள் ஆய்வு செய்து பெரிய அளவில் தங்கள் கடத்தலை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை கட்டுப்படுத்தியதாக கூறப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை திருச்சி விமான நிலையங்களில் தங்கம் கடத்தல் விவகாரத்தில் கைதானவர்கள், தலைமறைவான வர்கள், அவர்களின் முழு விவரங்கள், மேலும் கடத்தல் சம்பவத்தில் கைதானவர்களை ஜாமீனில் எடுத்தவர்கள், யாருக்காக தங்கம் கடத்தினார்கள், என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் சென்ற வருடம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஒரு கடத்தல் கும்பலை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பிடித்தனர். அவர்களை விசாரணை மேற்கொண்ட பின் சூளைமேட்டில் ஒரு வீட்டில் 20.6 கிலோ தங்கத்தை பதுக்கி வைத்தது அறிந்து அவர்களிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நாலு பேரை அதிகாரிகள் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகள் துபாயில் இருந்து விமானம் மூலமும் இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்டன.
இதேபோல் சென்ற ஆண்டு சென்னையில் வெளிநாட்டு பெண்ணிடம் இருந்து ஹாங்காங்கில் விமானம் மூலம் கடத்தி வந்த 20 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து வருவாய்த்துறையினர் பெண்களை கைது செய்தனர். மேலும் சென்னை விமான நிலையத்தில் 9.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர். அதுமட்டுமில்லாமல் சென்ற ஆண்டு ஜனவரி மாதம் சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் கொரிய நாட்டு இளம் பெண்கள் வைத்திருந்த 24 கிலோ கடத்தல் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
ஒரே மாதத்தில் நான்கு வழக்குகளில் 74.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்து இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிந்து அவர்கள் யாருடன் தொடர்புடையவர்கள் என்பதையும் கண்டறிந்து அவர்களை பற்றிய விவரங்கள் மத்திய வருவாய் புலனாய்வு துறை சுங்கத்தறை மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் திருச்சி விமான நிலையத்திலும் சென்ற ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை கடத்தல் கும்பலை கைது செய்து 15 நாட்கள் திருச்சி விமான நிலையத்திலேயே முகாமிட்டு பல கோடி மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின்னர் விசாரித்த சுங்கத்தறையினர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தற்போது கேரள தங்க கடத்தல் விவகாரம் பற்றி விசாரணை நடத்தும் என்.ஐ.ஏ, தமிழகத்தில் தங்கம் கடத்திய கும்பலுக்கும் கேரளாவில் தங்கம் கடத்தியதாக கைதான ஸ்வப்னா சுரேஷ் கும்பலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவை மட்டுமல்லாமல் ஆந்திர மாநிலத்திலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரே நாளில் 64 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு அதில் 5 பேரை கைது செய்துள்ளனர் அவர்கள் குறித்த விவரங்களையும் என்.ஐ.ஏ விசாரணை செய்து வருகிறது. நாடு முழுவதும் பரவியுள்ள இந்த தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொண்டு வருவதால் கடத்தல் கும்பலில் சேர்ந்தவர்களுக்கு பீதியை கொடுத்துள்ளது.