நடப்பு (2020) ஆண்டில் முதல்முறையாக லடாக் விண்டர் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் மாவட்ட ஸ்போர்ட்ஸ் குழு இணைந்து கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரை நடத்தியது. 13 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் லடாக் ஸ்கவுட் ரெஜிமண்டல் செண்டர் அணியும், ஐடிபிபி (ITBP) அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இரு அணிகளும் மோதின. அந்தப் போட்டிக்கு துணை ஆணையாளர் சச்சின் குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மூன்று சுற்றுகளாக நடந்த இந்தப் போட்டியில் இரு அணிகளும் சிறப்பாக ஆடின. முதல் சுற்றில் கோல் எதுவும் விழாத நிலையில், இரண்டாவது சுற்றில் ஐடிபிபி அணி இரண்டு கோல்களை அடித்தது.
அதற்கு பதிலடியாக லடாக் ஸ்கவுட் ரெஜிமண்டல் செண்டர் அணி ஒரு கோலை அடிக்க ஆட்டம் பரபரப்பாகியது. பின்னர் நடந்த மூன்றாவது சுற்று ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் லடாக் ஸ்கவுட் அணி அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அசத்தியது. இதனால் ஆட்டநேர முடிவில் லடாக் ஸ்கவுட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றியது.
பின்னர் வெற்றிபெற்ற அணிகளுக்கு சாம்பியன்ஷிப் கோப்பையை துணை ஆணையாளர் சச்சின் குமார் வழங்கினார்