தங்க நகைகளை திருடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு மாம்பலம் பகுதியில் பத்ரி நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 6-ம் தேதி குடும்பத்துடன் ராமேஸ்வரத்திற்கு சென்று விட்டு 8-ம் தேதி வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பத்ரி நாராயணன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 35 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இதே பகுதியில் வசித்து வரும் ஸ்ரீராம் என்பவரின் வீட்டிலும் கடந்த 14-ம் தேதி 15 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்த தனித்தனி புகாரின் பேரில் அசோக் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் 2 வீடுகளிலும் ஒரே கைரேகை பதிவாகி இருந்ததால், 2 வீடுகளிலும் கைவரிசை காட்டியது ஒரே நபர்கள் தான் என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்திய போது வெங்கடேசன் மற்றும் சிவகுமார் ஆகிய 2 பேரும் நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. இவர்கள் 2 பேரையும் கைது செய்த காவல்துறையினர் 50 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரிடமும் நடத்திய விசாரணையின் போது கேஸ் அடுப்பு ரிப்பேர் பார்ப்பதாக கூறி வீடுகளை நோட்டமிட்டு ஆளில்லாத நேரம் பார்த்து கைவரிசை காட்டியது தெரிய வந்தது. இவர்களை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.