ஓஎன்ஜிசி மற்றும் ரிலையன்ஸ் ஆகிய பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் கேஸ் விலையை நிர்ணயம் செய்வதற்கான சூத்திரத்தை மறு ஆய்வு மேற்கொள்ள அரசாங்கம் ஒரு குழுவை அமைத்து இருக்கிறது. பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகம், திட்டக்கமிஷனின் முன்னாள் உறுப்பினர் கிரித் எஸ் பரிக் தலைமையில் இந்த ஆய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. அரசாங்கம் மூலம் அமைக்கப்பட்ட இக்குழுவானது எரிவாயுநுகர்வோருக்கு நியாயமான விலை பற்றி ஆலோசனைகளை வழங்கும்.
நகர கேஸ் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தனியார்நிறுவனங்கள், பொது எரிவாயு நிறுவனமான கெயில் இந்தியா லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் உர அமைச்சகம் போன்றவற்றிலிருந்து தலா ஒரு பிரதிநிதி அரசு அமைத்த குழுவில் இடம்பெற்றுள்ளார். கடந்த 2014ம் வருடத்தில் அரசாங்கம் எரிவாயு உபரி நாடுகளின் கேஸ்விலையை பயன்படுத்தி உள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவின் விலையை நிர்ணயம் செய்வதற்கான சூத்திரத்தைக் கண்டறிந்தது. இந்த சூத்திரத்தின் அடிப்படையில் கேஸ் விலைகள் மார்ச் 2022 வரை உற்பத்திசெலவை விட பன்மடங்கு குறைவாக இருந்தது.
எனினும் உக்ரைன் போர் துவங்கிய சில மாதங்களில் இந்த விகிதம் வேகமாக அதிகரித்து இருக்கிறது. பழைய எரிவாயு வயல்களிலிருந்து எரிவாயுவின் விலை ஏப்ரல் முதல் யூனிட்டுக்கு $6.1 ஆக (MMBTU) இரட்டிப்பாகி உள்ளது மற்றும் அடுத்த மாதத்திற்குள் ஒரு யூனிட்டுக்கு $9 ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் நுகர்வோருக்கு வழங்கக்கூடிய எரிவாயுக்கான நியாயமான விலையை பரிந்துரை செய்யும்மாறு இக்குழுவைக் கேட்டுள்ளது.
உரங்கள் தயாரிப்பது மட்டுமல்லாது இந்த எரிவாயு மின் உற்பத்திக்கும், சிஎன்ஜி மற்றும் எல்பிஜியாகவும் பயன்படுத்தப்படுகிறது. சர்வதேச விலை குறைப்புக்கு ஏற்ப எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களால் வணிகரீதியிலான எல்.பி.ஜி சிலிண்டரின் (19-கிலோ) விலை ரூபாய்.91.50 குறைக்கப்பட்டு உள்ளது. இன்றைய விலை குறைப்புக்கு பின் டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை மற்றும் நாட்டின் பிறபகுதிகளில் வணிகரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலையானது குறையும். இது பொதுமக்கள் இடையே பெரிய நிவாரணத்தை கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.