முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியின் நண்பரும் வேலூர் ஆவின் தலைவருமான வேலழகன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி வீரமணியின் வீடு உள்பட 35 இடங்களில் கடந்த 16ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் இறுதியில் 34 லட்ச ரூபாய் ரொக்கப் பணம், நகைகள், வெளிநாட்டு டாலர் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியின் நண்பரும் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளரும் ஆவின் தலைவருமான வேலழகனின் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது.
வேலூர் ஆவின் அலுவலக அலுவலகத்தில் 6 மணிநேர நேரத்தைக் கடந்தும் சோதனை நடைபெற்றது. மேலும் வேலூர் ஆவின் தலைவர் வேலழகனின் நண்பர் சம்பந்த்திற்கும் சொந்தமான சாய் நாதபுரத்தில் உள்ள வீட்டிலும் காலை 10 மணி முதல் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர். வருமானவரித்துறையினரின் சோதனையால் வேலூர் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.