கே.சி வீரமணியிடம் இருந்த தங்கம், வெள்ளி வைரத்தின் மதிப்பையும், பண மதிப்பு, ஆவணங்கள் உள்ளிட்டவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்..
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நேற்று அதிகாலை முதல் இரவு வரை, 18 மணிநேரம் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனை நடைபெற்று முடிந்தது.. இந்த சோதனை முடிவில் 34 லட்சம் ரொக்கம், இந்திய மதிப்பு படி 1 லட்சத்து 50 ஆயிரம் அந்நிய செலாவணி டாலர்கள், 5 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, வைரம், வங்கி சம்பந்தமான கோப்புகள், சொத்து சம்பந்தமான ஆவணங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
நேற்று 35 இடங்களில் நடந்த சோதனையின்போது, பறிமுதல் செய்யப்பட்ட இந்த சொத்து ஆவணங்கள் தற்போது தான் படிப்படியாக வேலூரில் இருக்கக்கூடிய லஞ்ச ஒழிப்பு துறைக்கு வரப்பட்டுள்ளது.. வரக்கூடிய ஆவணங்கள், சொத்து மதிப்பு அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்..
ஜோலார்பேட்டையில் இருக்கக்கூடிய கே.சி வீரமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம், வெள்ளி வைரத்தின் மதிப்பையும், பண மதிப்பையும் மதிப்பிட்டு வருகிறார்கள்.. இவருடைய சொத்து ஆவணங்கள், நகைகள் இவையெல்லாம் எந்தெந்த காலகட்டத்தில் வாங்கப்பட்டது என்ற விசாரணையை மேற்கொண்டு, வாங்கப்பட்ட அதற்கான உரிய ஆவணங்கள் இருக்கிறதா என்று ஆய்வுகள் தொடங்கியுள்ளது.. இந்த பணியின் முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்..
மேலும் கே சி வீரமணி வீட்டுக்குப் இன் 275 யூனிட் மணல் (30 லட்சம் மதிப்பிலான மணல்) குவித்து வைக்கப்பட்டுள்ளதாக நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. அதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் குவிக்கப்பட்ட பகுதிக்கு சென்று மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..