இரண்டு கைகள் இல்லாத நபர் ஸ்னூக்கர் விளையாட்டில் அசத்துவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாகிஸ்தானில் இருக்கும் சாமுண்டி கிராமத்தை சேர்ந்தவர் இக்ரம். இரண்டு கைகளும் இல்லாத இவர் எட்டு வருடங்களாக தனது தாடையால் ஸ்னூக்கர் பந்து விளையாட்டில் பயிற்சி எடுத்து வந்தார். இன்று சாதாரணமாக விளையாடி வருகிறார். கைகள் இல்லை என்றாலும் தனது கழுத்தை நெகிழ்த்தி தாடையால் பந்தை தாக்கி சரியான இலக்கில் விழச்செய்து ஸ்னூக்கரில் சாதித்து வருகிறார். இக்ரம் கைகள் இல்லாமல் அட்டகாசமாக விளையாடுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுபற்றி இக்ரம் கூறுகையில் “மிகச்சிறந்த ஸ்னூக்கர் வீரர்களை நான் சந்தித்துள்ளேன். என்னை ரியல் ஜீனியஸ் என்று அவர்கள் பாராட்டி உள்ளனர். பாகிஸ்தானுக்கு என்னால் புகழ் கிடைக்கும்” என கூறினார். ஏழ்மையான குடும்பத்தில் 9 குழந்தைகளில் ஒருவரான இக்ரம் புறக்கணிக்கப்பட்ட சிறுவனாக இருந்தார். நேரம் கிடைத்த போதெல்லாம் ஸ்னூக்கர் விளையாட்டை பார்த்து வந்தவர் ஒருநாள் தானும் அந்த விளையாட்டை விளையாடுவோம் என்று நினைத்து பார்த்தது இல்லை.
எப்படி ஸ்னூக்கர் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் வந்தது என்பது இக்ரமுக்கு தெரியவில்லை. யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக பயிற்சி எடுத்து வந்த இக்ரம் மற்றவர்கள் விளையாடுவதை பார்த்து தனது தாயிடம் தான் விளையாட வேண்டும் என கேட்டுள்ளார். பின்னர் தனது தாடையை நகத்தி அவர் விளையாடியதை பார்த்தவர்கள் அவரது ஆர்வத்திற்காக அவரை அங்கீகரித்தனர். இக்ரம் ஏதாவது உணவகங்களுக்கு சென்றால் அங்கு இலவசமாக அவருக்கு உணவு கொடுக்க படுகிறது.
மேலும் சிலர் அவருக்கு உணவு ஊட்டி உதவி செய்கின்றனர். இக்ரம் கூறுகையில் “கடவுள் எனக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் அதிக அளவு மன உறுதியை தந்துள்ளார். அதன் மூலம் எனது லட்சியத்தை நிச்சயம் அடைந்து விடுவேன். எனவே யாரும் என் மீதான நம்பிக்கையை இழக்க வேண்டியதில்லை” எனக் கூறியுள்ளார். சர்வதேச போட்டியில் விளையாட வேண்டும் என்பதே இக்ரமின் கனவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.