முதியவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள பி.தொட்டியபட்டி பகுதியில் சங்கரன்(80) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொண்ணு தாய் என்ற மனைவி உள்ளார். இவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்துள்ளார். நேற்று காலை தொட்டியபட்டி விலக்கு அருகே இருக்கும் விவசாய தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சங்கரன் சடலமாக கிடந்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சங்கரனின் உடலை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சங்கரனை கொலை செய்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.