செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், பாசமிகு அண்ணன், முன்னாள் முதலமைச்சர் கழகத்தின் பொருளாளர் ஓபிஎஸ் அவர்கள் எத்தனை முடிவுகளை எடுத்து இருக்கிறார்கள், அவர் விழுந்ததற்கு காரணம் என்ன என்பதை இந்த பத்திரிகையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது உலகம் சொல்வதைத்தான் இந்த பத்திரிகை சொல்கிறது தலைப்பு செய்தியாக,… ஊர் சொல்வதையும், உலகம் சொல்வதையும், தொண்டர்கள் செல்வதையும், நிர்வாகிகள் சொல்வதையும், நடுநிலையாளர்கள் சொல்லுகின்ற கருத்துக்களை தான் கூறுகிறார்கள்.
அவர் விழுந்ததற்கு என்ன காரணம் தொண்டர்களை அவர் கண்டுகொள்ளவில்லை, தொண்டர்களை கைவிட்டுவிட்டார், அவர்களை சுமப்பதற்கு தயாராகவில்லை, அந்த தெய்வீக சுமையை அவர் விரும்பவில்லை, அதோடு மட்டுமல்லாமல் குடும்ப நலத்தில் மட்டுமே அவர் அக்கறை காட்டினார். திராவிட முன்னேற்ற கழகத்தை எதிர்ப்பதற்கு தான் திராவிட இயக்கத்தினுடைய பரிமாண வளர்ச்சியாக இருக்கின்ற அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கையை அண்ணாயிசம், கேப்பிட்டலிசம், சோசியலிசம் இதோடு சேர்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்ப்பது தான் பிரதான கொள்கையாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை வளர்க்கப்பட்டது.
இங்கே இருக்கின்ற அருமை சகோதரர் சதன் பிரபாகரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், இங்கே இருக்கிற சரவண பாண்டி அவருடைய தந்தையார் காலத்தில் இருந்து அவர் தந்தையார் மேலவை உறுப்பினராக இருந்து விலைபோகாத சொக்கத்தங்கம் ஆக இருந்தவர். அவர் இரண்டாவது தலைமுறையாக இருக்கிறார். ஒன்றிய கழகத்தினுடைய செயலாளர் சவடால்பட்டி பாண்டி அவர்கள் பிள்ளையாக இரண்டாவது தலைமுறையாக இருக்கிறார். நான் சாதாரண கிளை கழக செயலாளராக, என் தந்தையார் புரட்சித்தலைவர் காலத்திலிருந்து நான் இரண்டாவது தலைமுறையாக இருக்கிறேன். எங்கள் ரத்தத்தில் ஊறியது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் இரத்தத்தில் ஊறியது திராவிட முன்னேற்ற கழகத்தை எதிர்க்க வேண்டும். அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தீய சக்தி, அந்த தீய சக்தியை எதிர்ப்பதிலே நம் சரணாகதி அடைந்து விட்டோம் என்று சொன்னால் தொண்டர்கள் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.சட்டமன்றத்தில் எந்த நிகழ்வு நடந்தது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன் முன்னாள் முதலமைச்சர் அவர்கள் சட்டசபையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பொறுப்பை ஏற்றுக் கொண்டு பேசுகிற அவர் 66 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழிநடத்த வேண்டிய பொறுப்பில் இருக்கிறார். அவர் சொல்லுகிறார்..
இது யாருடைய மனதையும் துன்புறுத்துவதற்க்காகவும், வருத்தப்பட வைப்பதற்காகவும் நான் சொல்லவில்லை இதை நினைவூட்டுவதாக சொல்லுகிறேன். பராசக்தி வசனத்தை என் தந்தையார் அவர்கள் படிக்கச் சொன்னார்கள், நான் அதை என் தலைமாட்டில்வைத்து மனப்பாடம் செய்து ஒப்புவிப்பேன் என்று யார் மனதை குளிர்விப்பதற்காக, ஒட்டுமொத்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை அடமானம் வைப்பதற்காக அந்த சொல்லை சொல்லுகிறார் என்று சொன்னால் நான் இதை நினைவுக்கு கொண்டு வருவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன். இதனால் யாரும் வருத்தப்பட வேண்டாம். ஏனென்றால் திமுக எதிர்ப்பதுதான் பிரதான கொள்கை என தெரிவித்தார்.