கைரேகை ஜோதிடரின் பேச்சைக் கேட்டு கணவன் மனைவியை விவாகரத்து செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சேர்ந்த ரகுநாத் என்பவர் ஒரு தொழில் செய்து வருகிறார். இவர் அரசியல் கட்சியிலும் பிரமுகராக இருக்கிறார். இவருக்கு கட்சியின் எம்எல்ஏ, மந்திரி போன்ற பெரிய பதவிக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்து உள்ளது. இதனால் கைரேகை நிபுணரிடம் சென்று ஜோதிடம் பார்த்துள்ளார். அவர் தங்களுக்கு வரவேண்டிய அனைத்து வாய்ப்புகளும் உங்கள் மனைவியால் தான் தடைப்படுகின்றது. அவர் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவர்.
அவரை விவாகரத்து செய்தால் உங்களுக்கு அனைத்தும் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய ரகுநாத் தனது பெற்றோருடன் சேர்ந்து அவரை அடித்து கொடுமைப்படுத்தி, தன்னை விட்டுச் செல்லும் படியும், தனக்கு விவாகரத்து தரும்படியும் கூறியுள்ளனர். இதனால் அவரது மனைவி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஜோதிடர் சொன்னதால் இவ்வாறு செய்ததாக தெரிவித்தனர். பின்னர் காவல்துறையினர் அவரையும், ஜோதிடரையும் கைது செய்தனர்.