மதுபழக்கத்தை கைவிட முடியாமல் விசைத்தறி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சட்டையும் புதூர் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் நடராஜன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மது பழக்கத்தை கைவிடுமாறு குடும்பத்தினர் நடராஜனை கண்டித்துள்ளனர்.
இதனால் நடராஜன் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மது பழக்கத்தை கைவிட முடியாமல் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக நடராஜனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் நடராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த திருச்செங்கோடு டவுன் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.