பெலகாவி அருகே குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்பட்டு வைக்கோலில் வீசப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
பெலகாவி மாவட்டம் அதானி தாலுகா அதர்நாலா கிராமத்தில் வைக்கோலில் இருந்து பெண் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதையடுத்து அங்கு சென்று அந்த குழந்தையை மீட்ட கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தையின் கை, கால், முகத்தில் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டிருந்த காயம் இருந்தது. உடலில் பல பகுதிகளிலும் காயம் இருந்தது. பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தை தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குழந்தையை இப்படி கொடூரமாக தாக்கி வைக்கோல் போருக்குள் வீசி எறிந்த மர்ம நபர்கள் யார் என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்தனர். குழந்தையை கொடூரமாக தாக்க வைக்கோல் போருக்குள் வீசிய மர்ம நபர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இதற்கிடையில் ஒரு குழந்தையை தந்தை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. அந்த வீடியோவில் இருக்கும் குழந்தை, வைக்கோல் போருக்குள் வீசப்பட்ட குழந்தையா? என்ற சந்தேகம் எழுந்ததால் காவல்துறையினர் அந்த வீடியோவை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.