ஏ.டி.எம் கார்டு மூலம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்வில்லிவலம் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் காலாவதியான தனது ஏ.டி.எ.ம் கார்டுக்கு பதிலாக புதிய ஏ.டி.எ.ம் கார்டை வாங்கியுள்ளார். அதற்கான ரகசிய நம்பரை பதிவு செய்வதற்காக ஏழுமலை அருகில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். ஏ.டி.எம் இயந்திரத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்ததால் ஏழுமலை அங்கிருந்த சரண்ராஜ் என்பவரை உதவிக்கு அழைத்துள்ளார். இந்நிலையில் உதவி செய்வது போல நடித்த சரண்ராஜ் ஏ.டி.எ.ம் கார்டை வாங்கி ரகசிய நம்பரை பதிவு செய்த பிறகு வேறொரு ஏ.டி.எ.ம் கார்டை ஏழுமலையிடம் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து ஏழுமலையின் செல்போன் எண்ணிற்கு அவரது வங்கிக்கணக்கில் இருந்து 18 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஏழுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஏ.டி.எ.ம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது வந்தவாசி பகுதியில் வசிக்கும் சரண்ராஜ் ஏழுமலையின் ஏ.டி.எ.ம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்தது தெரியவந்துள்ளது. அதன்பின் சரண்ராஜை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.