தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தேசிய கொடி ஏற்றி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் தேசிய கொடியை ஏற்றி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரி மாநிலத்தின் கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். இதனால் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானாவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு தொடர்ந்து புதுச்சேரியிலும் தேசிய கொடி ஏற்றி போலீசாரின் மரியாதையை ஏற்றுக்கொள்ள விருப்பதாக கூறியுள்ளார்.
இதேபோல் கடந்த 2015ஆம் ஆண்டு புதுச்சேரியின் கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து அந்தமான் நிகோபார் தீவின் கவர்னர் குடியரசு தினத்தன்று மாநிலத்தின் முதல்வரை தேசியக் கொடியை ஏற்றுமாறு கூறினார். அதேபோல் பெரிய மனதோடு தமிழிசை சௌந்தரராஜன் செய்திருக்கவேண்டும். ஆனால் இரண்டு இடங்களிலும் தானே கொடியேற்றுவேன் என்று தமிழிசை முந்திக்கொண்டு செல்கிறார். இந்திய வரலாற்றிலேயே ஒரே கவர்னர் இரண்டு மாநிலங்களில் கொடியேற்றுவது இதுவே முதன் முறையாக இருக்கும். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது இவ்வாறு கவர்னர் கொடியேற்றுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அவமானம் ஆகும். அதுபோக முதலமைச்சர் ரங்கசாமி தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் இன்றுவரை நிறைவேற்றவில்லை.
புதுச்சேரியில் நகர்ப்புற மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. அதை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை கேட்டால் நிதிப்பற்றாக்குறை என்று காரணம் கூறுகிறார்கள். நிதி இல்லை என்றால் மத்திய அரசிடம் கேட்க வேண்டியதுதானே..? அதையும் மாநில அரசு செய்யவில்லை. மத்திய அரசிடம் மொத்த பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு டம்மியாக செயல்பட்டு வருகிறது புதுச்சேரி மாநில அரசு. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி முழுக்க முழுக்க தடைபட்டு நிற்கிறது.” இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.