உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட கணவன்-மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தி அருகே உள்ள காளிப்பாளையம் பகுதியில் பெரியசாமி, அவரது மனைவி காளியம்மாள் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் உடல்நலத்தில் சற்றும் முன்னேற்றம் ஏற்படாததால் கணவன்-மனைவி மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பவத்தன்று பெரியசாமி, காளியம்மாள் இருவரும் வீட்டை விட்டு வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது கணவன்-மனைவி இருவரும் தூக்கில் தொங்கி கொண்டிருந்தனர்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இரண்டு பேரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெரியசாமி மகன் அளித்த புகாரின் அடிப்படையில் பரமத்தி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.