காட்டு யானை சாலையின் குறுக்கே நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கீழ்தட்டபள்ளம் பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை ஒன்று முகாமிட்டுள்ளது. இந்நிலையில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானை உலா வந்ததை பார்த்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் காட்டு யானை ஒன்று வாகனங்களை வழிமறித்த படி சாலையின் குறுக்கே நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வாகனங்களில் அமர்ந்திருந்தனர். சுமார் 30 நிமிடங்கள் கழித்து காட்டுயானை வனப்பகுதிக்குள் சென்றதால் வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.