பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை கண்டுபிடிக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட தெற்குமாதவி, கூத்தூர், இலுப்பைக்குடி ஆகிய பகுதிகளில் பகல் நேரத்தில் வயல்வெளிகளில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை மர்ம நபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து திருடிச் செல்லும் சம்பவம் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் தெற்குமாதவி கிராமத்தில் வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தெற்குமாதேவி கிராம பகுதியை சேர்ந்த சிலர், மர்மநபர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அதனை பார்த்து சுதாரித்துக் கொண்ட மர்ம நபர்கள் திருடிய ஆடுகளை விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதையடுத்து தெற்குமாதவி கிராமத்தில் சிறுவாச்சூர்-அரியலூர் செல்லும் சாலையில் ஆடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை கண்டுபிடிக்கக்கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மருவத்தூர் காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.