விவசாயி வீட்டின் பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள குறும்பலமகாதேவி கிராமத்தில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு அய்யம்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்ததும் காளியப்பன் வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார்.
அப்போது அவரின் வீட்டு கதவு திறக்கப்பட்டு, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காளியப்பன் உடனடியாக ஜோடர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் பரமத்திவேலூர் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளியப்பன் வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.