கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ,சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு தொடுத்துள்ளனர். கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் கடந்த 2017ஆம் வருடம் ஏப்ரல் 24ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அங்கிருந்த சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தீபு, சயான், மனோஜ், சதீசன் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து இந்த வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து இன்று உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் ஆஜராக சயான் மற்றும் மனோஜ் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். கூடுதல் விசாரணை தேவைப்படுவதால் கால அவகாசம் கோரியதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.