தொழிலதிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் உதயகுமார் அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் உதயகுமாரை அரிவாளால் பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த உதயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மத்திகிரி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர்.
அதன்பிறகு உதயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் உதயகுமார் பிரபல ரவுடி கஜாவின் நண்பர் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் உதயகுமார் மீது ஒரு கொலை வழக்கும் மத்திகிரி காவல் நிலையத்தில் பதிவாகி உள்ளது. இதனையடுத்து உதயகுமாருக்கு சகோதரர் வழியிலும், தொழில் ரீதியாகவும் பல எதிரிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே காவல்துறையினர் உதயகுமார் தொழில்ரீதியாக கொலை செய்யப்பட்டுள்ளாரா, இல்லையெனில் வேறு ஏதும் காரணங்கள் இருக்கிறதா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.