தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நாய்க்கனூர் ஏரி வழியாக சில விவசாயிகள் விளை நிலங்களுக்கு சென்றுள்ளனர். அப்போது தண்ணீரில் குழந்தையின் உடல் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தொப்புள் கொடியுடன் தண்ணீரில் மிதந்த குழந்தையின் உடலை மீட்டனர். பின்னர் குழந்தையின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்தது தெரியவந்தது. எனவே பெற்றோர்களே குழந்தையை ஏரியில் வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.