வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மருமகள், பேரன் மீது தீ வைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவில் வசித்துவருபவர் பெரியகருப்பன்(60). இவர் திராட்சை தோட்டத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார். இவருக்கு அருண்பாண்டியன் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் அப்பகுதியில் வசித்த சிவப்பிரியா(25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு யாகித்(2) என்ற ஆண் குழந்தை இருக்கின்றது. சிவபிரியா இல்லம் தேடி மருத்துவர் திட்டத்தில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து மகன் காதல் திருமணம் செய்து கொண்டதால் தனது மருமகளிடம் வரதட்சனை கிடைக்கவில்லை என்று அருண்பாண்டியன் குடும்பத்தினர் அடிக்கடி பிரச்சினை செய்துள்ளார்கள். வரதட்சணை கேட்டு மாமனார் பெரியகருப்பன், மாமியார் ஒச்சம்மாள், நாத்தனார் கனிமொழி ஆகியோர் தொடர்ந்து கொடுமைப்படுத்தினார்கள். இதனால் சிவப்பிரியா மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாமனார் பெரிய கருப்பனுக்கும், சிவப்பிரியாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பெரியகருப்பன் தனது மருமகள் பேரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டார்.
இந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே யாகித் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து ராயன்பட்டி காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சிவபிரியாவிடம் தேனி மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
அப்போது சிவப்பிரியா கொடுத்த வாக்குமூலம் தனது கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தன்மீது, தனது மகன் மீது பெட்ரோல் ஊற்றி மாமனார் எரித்து விட்டார் என்று தெரிவித்தார். இதனை அடுத்து ராயப்பேட்டை காவல்துறையினர் 4 பேர் மீது வழக்கு பதிந்து பெரியகருப்பனை கைது செய்துள்ளனர். மற்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.