கொடைக்கானலுக்கு ஆர்வத்துடன் வருகை தரும் சுற்றுலா பயணிகள் தற்போது கடும் குளிர் நிலவி வருவதால் சிரமப்பட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் வழக்கமாக நவம்பர் மாதம் குளிர் காலம் துவங்கி, பிப்ரவரி மாதம் இறுதியில் குளிரின் தாக்கம் படிப்படியாக குறையும். ஆனால் இந்த வருடம் வழக்கம் போல் இல்லாமல் குளிரின் தாக்கம் குறையாமல் அப்படியே நிலவி வருகிறது. இந்நிலையில் பகல் நேரங்களில் வெப்பம் நிலவினாலும், குளிரின் அளவு சிறிதும் குறையவில்லை. இருந்தபோதிலும் கொடைக்கானலுக்கு ஆர்வத்துடன் சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
கொடைக்கானலில் உள்ள கோக்கர்ஸ் வாக்கில் பனி மூட்டங்கள் தரையில் இறங்கி கடல் அலைகள் போல காட்சியளித்து வருகிறது. இந்தப் பகுதியில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் சென்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும், குளிரின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் சற்று சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த குளிரின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பான உடைகளை அணிந்து நடமாடி வருகின்றனர்.